×

ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணி; 217 பதவிகளுக்கு 35 ஆயிரம் பேர் போட்டி: 126 தேர்வு மையங்களில் இன்று எழுத்து தேர்வு நடந்தது

சென்னை: ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணியில் 217 பதவிகளுக்கு நடத்தப்பட்ட எழுத்து தேர்வை 35 ஆயிரம் பேர் இன்று எழுதினர். இதற்காக மாநிலம் முழுவதும் 126 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் தமிழ்நாடு பொது சார்நிலை பணியில் உதவி புள்ளியியல் ஆய்வாளர் 211 இடங்கள், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து சார்நிலை பணியில் கணக்கிடுபவர் 5 இடங்கள், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்து சார்நிலை பணியில் புள்ளியியல் தொகுப்பாள் 1 இடம் என 217 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த செப்டம்பர் 15ம் தேதி அறிவித்தது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த அக்டோபர் 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு 35,286 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஆண்கள் 11,870 பேர், பெண்கள் 23416 பேர் அடங்குவர்.

இந்த நிலையில் இப்பதவிகளுக்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும்(பட்டப்படிப்பு தரத்திலும்), பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. அதாவது கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வு(10ம் வகுப்பு தரம்), பொது அறிவு(பட்டப்படிப்பு தரத்திலும்) நடந்ததது. தோ்வு மாநிலம் முழுவதும் 217 மையங்களில் நடந்தது. சென்னையை பொறுத்தவரை 18 மையங்களில் நடந்தது. சென்னையில் நடந்த மையங்களில் 4608 பேர் தேர்வு எழுதினர். தேர்வு காலை 9.30 மணிக்கு தான் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தேர்வு எழுதுபவர்கள் காலை 7 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். அவர்கள் தேர்வு மையங்களுக்கு வெளியே கடைசி கட்டமாக தேர்வுக்கு தயாராகும் பணியில் ஈடுபட்டனர். தேர்வை கண்காணிக்கும் வகையில் ஒருவர் வீதம் 126 முதன்மை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் தேர்வு நடந்த மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தேர்வு நடந்த மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மையங்களுக்கு தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Tags : Integrated Statistical Relational Work; 35 thousand candidates compete for 217 posts: Written exam was held today in 126 examination centers
× RELATED பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி...